என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மொய் விருந்து"
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் அமெரிக்க வடக்கு கரோலினா நகரில் தமிழகத்தை சேர்ந்த வாகை மகளிர் குழுவினர் மொய் விருந்து நடத்தி இந்திய மதிப்பில் ரூ.3½ லட்சம் வசூல் செய்தனர்.
இதில் 250 தமிழ் குடும்பங்கள் உள்பட இந்திய குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடப்பது போல தரையில் விரிப்புகள் போட்டு, தலை வாழை இலைகள் வைத்து அறுசுவை உணவுகளை ஏற்பாட்டாளர்களே பரிமாறினர்.
இந்த மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. இதுகுறித்து மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெய்நடேசன், கீதா சுரேஷ், பிரவீணா வரதராஜன் ஆகியோர் கூறியதாவது:-
கஜா புயலால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி மறுநடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மறுவாழ்வுக்கு வழி செய்யவில்லை. இதனால் தான் குறுகிய காலத்தில் கலாசார முறைப்படி உதவிகள் பெற தமிழகத்தில் மொய் விருந்து நடத்துவது போல அமெரிக்காவிலும் நடத்தினோம். முடிந்த அளவு அழைப்புகள் அனுப்பினோம்.
இதில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு தாராளமாக மொய் செய்தார்கள். இதில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்துள்ளது. எங்களால் ஒரு கிராமத்தை மீட்க முடியும் என்று நம்புகிறோம். அதேபோல் நல்ல சம்பளத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் விரைவில் நம் விவசாயிகளை மீட்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone
புதுக்கோட்டை:
கால ஓட்டத்தின் நடை முறை, வாழ்வியல் முறைகள் மாறினாலும் சில கலாச்சாரங்கள் இன்னும் பல கிராமங்களில் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
அப்படித்தான் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட கிராமங்களில் தொன்று தொட்டு நடந்துவரும் மொய் விருந்து விழாக்களும். ஆடி மாதத்தில் அப்பகுதி கிராமங்களில் நடைபெரும் மொய் விருந்து விழாக்களால் ஒரு புறம் கோடிக்கணக்கில் வர்த்தகமும், மறுபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து விழாக்கள் காலமாற்றத்தால் தற்போது வர்த்தக ரீதியான வாழ்வாதாரமாக மாறிப்போயுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றிய கிராமங்களில் திரும்பிய பக்கமெல்லாம் திகைக்க வைக்கும் மொய் விருந்து பிளக்ஸ் பேனர்களும், வீடு தோறும் குவிந்து கிடக்கும் மொய் விருந்து அழைப்பிதழ்களும் நம்மை வரவேற்கின்றன.
தொடக்கத்தில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சுற்றி கிராமங்களில் தொடங்கியது தான் இந்த மொய்விருந்து கலாச்சாரம். வாழ்வில் பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தின்வறுமையை போக்க உறவினர்கள் ஒன்றிணைந்த தங்களால் இயன்ற தொகையை மொய் விருந்து என்ற விழாவின் மூலம் ஒரு வருக்குகொடுப்பார்கள்.
அந்த தொகையின் மூலம் விவசாயம் அல்லது தொழில் செய்து ஏழ்மை நிலையில் உள்ள நபர் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கம்.அதன் பிந்தைய காலகட்டத்தில் படிப்படியாக பெரும்பாலானோர் மொய் விருந்து விழாக்களை நடத்த தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் தொடங்கி மொய் விருந்து விழாக்கள் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், ஆலங்குடி வரை பரவத்தொடங்கியது.
இந்த ஆண்டு ஆடி 1-ந்தேதி முதல் அப்பகுதி கிராமங்களில் மொய் விருந்து விழாக்கள் களை கட்ட தொடங்கியுள்ளது. 8 பேர் முதல் 32 பேர் வரையில் பொது பந்தல் அல்லது மண்டபங்களிலோ கூட்டு சேர்ந்தோ விழாவை நடத்துவார்கள். தங்கள் தகுதிக்கேற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் மொய்த் தொகையாக பெறுவார்கள். அதனை விவசாயம் அல்லது தொழிலில் முதலீடு செய்து அதில் வரும் வருமானத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு மொய் செய்தவர்களுக்கு திருப்பி செலுத்துவார்கள்.
கடந்த ஆண்டு ரூ.400 கோடி வரையில் இந்த மொய் விருந்து விழாவால் பணப் பரிமாற்றம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு ரூ.500 கோடியை தாண்டி பரிமாற்றம் நடைபெறும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விழாக்கள் மூலம் வட்டியில்லாத கடன் கிடைப்பதோடு திருப்பி செலுத்துவதும் எளிது என்பதாலே அப்பகுதி கிராம மக்கள் மொய் விருந்து விழாக்களை 5 ஆண்டிற்கு ஒரு முறை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மொய் செய்ய வருபவர்களை விழாதாரர்கள் மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டு கிடாய் விருந்து உபசரிப்பு தாராளமாக நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் பலர் கூட்டு சேர்ந்து ஒரே விழாவாக நடத்துவதால் உணவு செலவும் குறைவு.
விழாதாரர்களுக்கு ஒரு புறம் வருவாய் இருக்க, இந்த விழாக்கள் மூலம் ஆயிரக்கணக்காணோர் வேலை வாய்ப்பையும் பெறுகிறார்கள். அப்பகுதியில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடி மாதத்தில் மொய் எழுதும் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
அதே போல் சமையல் தொழிலாளிகள், பந்தல் அமைப்பவர்கள், பத்திரிக்கை விநியோகம் செய்பவர்கள், உணவு பரிமாறுபவர்கள் என்று பல தரப்பினருக்கு வேலை வாய்ப்பாக அமைகிறது. அதேபோல் மளிகைக் கடை வைத்திருப்பவர்கள், ஆடு வியாபாரிகள், இலை வியாபாரிகள், பத்திரிக்கை மற்றும் ப்ளக்ஸ் பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம்முழுவதும் நல்ல வருவாய் கிடைப்பதோடு பலகோடி ரூபாய் அளவில் வர்த்தகமும் நடைபெறுகிறது.
மொய் விருந்தில் பணம் எண்ணும் எந்திரம் பயன்படுத்துவது, வங்கி அலுவலர்களை வரவழைத்து பணியை மேற்கொள்வது போன்ற நடைமுறைகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள பெரியாளூரில் நேற்று நடந்த மொய் விருந்து நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் மூலம் மொய் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.
மொய் செய்தவர்களுக்கு விழா நடத்துபவர்கள் சார்பில் ரசீது வழங்கப்படுவதோடு, அவர்களின் செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்.சும் அனுப்பப்பட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி மொய் விருந்து வரை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மொய் விருந்து விழாக்களை நடத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் பெற்ற பணத்தை முறையான வகையில் பயன் படுத்தினால் வாழ்வில் முன்னேறலாம் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது.
ஆடிமாதத்தில் மட்டுமே விழா நடத்த வேண்டும், ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மொய் விருந்து விழா நடத்த வேண்டும், தான் பெற்ற மொய் பணத்தை அடுத்த 5 ஆண்டுகளில் முறையாக திருப்பி செய்த பின்னரே அடுத்த முறை விழா வைக்க வேண்டுமென இந்த மொய் விருந்து விழாக்களுக்கும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.
ஆனாலும் காலங்களை கடந்தும் அப்பகுதி கிராமங்களில் இந்த கலாச்சார விழா தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. மக்களை பாதிக்காத வரையில் எந்த ஒரு கலாச்சார விழாக்களும் வரவேற்க கூடியதுதான். #Moivirunthu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்